Saturday, 9 May 2026

ஆபரேஷன் சிந்தூர் - நாம் கற்றதும், கல்லாததும்

கர்னல் ஆர் ஹரிஹரன்        

பாகிஸ்தானை எதிர்த்து இந்திய ராணுவப் படைகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடுத்த ஆபரேஷன் சிந்தூர் 1971-ல் இந்தியா நடத்திய போருக்கு பிறகு நடத்திய மிகப்பெரிய போராகும்.

மே 6 மற்றும் மே 10, 2025 ஆகிய தேதிகளுக்கு இடையே நிகழ்ந்த ஐந்து நாள் போர், பல அரசியல் மற்றும் ராணுவப் பாடங்களை வழங்குகிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது, பகல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம்   பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் கேந்திரங்களை அழித்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் என்ற புதிய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக்கியது.

இந்த நிலைப்பாட்டை இந்தியாவின்  “புதிய இயல்பு” (New Normal) என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவு படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பல களங்களில் இந்தியா அதி தீவிரமாக நடத்திய இந்தப் போரில், முதல் முறையாக ராணுவம் இந்தியாவில் தயாரித்த பிரமோஸ் ஏவுகணைகள் மற்றும் எதிரி விமானங்களை எதிர்த்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட நவீன உள்நாட்டு பல்லடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பைப் பயன்படுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து வந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தொடர் தாக்குதல்களை முறியடிப்பதில் இவை முக்கிய பங்காற்றின.

இதைத்தவிர, இந்தப் போர் இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் முதன் முறையாக ஒருங்கிணைந்து செயல் பட்டன. அதே மாதிரி முதன் முறையாக உள்நாட்டில் தயாரான சுற்றித்திரியும் வெடிமருந்துகள் (Loitering munitions), ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போருக்கு உபயோகித்தை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் கவனித்திருப்பார்கள்

இந்த போரில் பாகிஸ்தான் பகுதிகளான பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் (PoJK)துல்லியமான தாக்குதல்களுக்கு விமானப் போருடன்,ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை இணந்து செயல்பட்டதின் மூலம்  இந்திய ராணுவத்தின் போர்முறை கொள்கையில் ஒரு புதிய அத்தியாயம் என்று கூறலாம்.

இந்த மாற்றம் முப்படைகளுக்கு இடையேயான வெற்றிகரமான ஒருங்கிணைப்பையும், "ஆத்மநிர்பர்" (தற்சார்பு) பாதுகாப்புத் திறன்களையும் வெளி படுத்தியுள்ளது.

இதில், முப்படைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும், எதிர்கால மோதல்களுக்கான தயார்நிலையை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் கவனம் தேவைப்படும் அம்சங்களும் ள்ளன.

முக்கிய குறைபாடுகள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த குறைபாடுகளை நீக்க வழி காணா விட்டால் முப்படைகளின் தயார்நிலை குறைய ஏதுவாகும்.  

பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுற்றுலா ஸ்தலமான பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை, அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக உயிரை குடித்தார்கள். அந்த லஷ்கர் தீவிரவாதிகளின் ஊடுரவலைப் பற்றிய விவரங்கள் எந்த ஒரு நு்ண்ணறிவுத் துறைக்கோ அல்லது போலீசுக்கு வரவில்லை. இத்தகைய குறைபாடுகளை தவிர்க்க அந்த அமைப்புகளை முடுக்கி விடவேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

கடந்த ஆண்டில் (2025–2026), இந்தியப் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அமைப்புகள் குறைந்தது 15 முதல் 20 வரையிலான பயங்கரவாதக் குழுக்களை (modules) முறியடித்து உள்ளன. இவற்றில் பெரும்பான்மை- யானவை ஐசிஸ், அல்-கயிதா, ஐயிஷ் ஏ மொகம்மத் மற்றும் கஷ்மீரில் இயங்கும் அன்சர் கஸ்வா ஏ ஹிந்த் (AGH) போன்ற ஜிஹாதி அமைப்புகளுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவற்றுள், சுமார் 10 முதல் 12 குழுக்கள் வெளிப்படையாகவே ஜிஹாதித் தன்மையைக் கொண்டவையாக இருந்தன; எஞ்சியவை பப்பர் கல்ஸா (BKI) போன்ற காலிஸ்தான் குழுக்களுடனும், போதைப்பொருள் சார்ந்த பயங்கரவாத வலைப்பின்னல்களுடனும் தொடர்புடையவையாக இருந்தன.

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் (ATS), ஐசிஸ்(ஆப்கானிஸ்தான்) அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரைக் கைதுசெய்தனர்; இரசாயன முன்னோடிப் பொருட்களைக் கைப்பற்றினர்.

உத்திர பிரதேசத்தில் அல்-கொய்தா பிரச்சாரக் குழு: செயல்பாட்டாளர் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தொடர்புடையவர்களை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், கைது செய்துள்ளனர்.

ஆகவே தொடர்ந்து எல்லை மாநிலங்கள், முக்கியமாக குஜராத், பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள், மத்திய அரசுடன்  ஒருங்கிணைந்து செயல் படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு்ள்ளது. கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி தீவிரவாதத்தை எதிர்த்த செயல்படுவதில் இன்னும் தேவையான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது துக்ககரமான சம்பவமே.

இரண்டாவதாக, இந்தியா போரில் வென்றாலும், அதைப் பற்றிய விவரங்களை பத்திரிகை உலகுக்கு தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மாறாக, பாகிஸ்தான் போரைப்பற்றிய பொய்யான தகவல்களை மேற்கத்திய ஊடகங்கள் மூலம் முந்திக் கொண்டு பரப்பியது குறிப்பிடத் தக்கது. உடனுக்குடன் செய்திகள் மின்வலைகள் மூலம் பரவும் இக்காலத்தில், இத்தகைய மெத்தனம் அரசியல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப எதிரி நாடுக்கு உதவும் என்பதில் ஐயம் இல்லை.  

மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தானே இந்திய-பாகிஸ்தான் போரில் அமைதிகாண உதவியதாக பல முறை கூறியுள்ளார். இதை அவர் சுய ஆதாயத்துக்காக கூறினாலும் அதை வலுவாக மறுக்க இந்திய வெளியுறவு அலுவலகம் தவறியது. அத்தகைய அந்நிய தலையீட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்து செயல்பட வேண்டும்.

கர்ல் ஆர் ஹரிஹரன் ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் தெற்காசிய அரசியல் மற்றும் தீவிரவாதங்களை பற்றிய ஆய்வில் பங்கு பெற்றவர்.

No comments: